Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன்- எனது பார்வையில்.


முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் என்ற பழமொழியின் தத்துவத்தை தாங்கி தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதமே சரி என்று சொல்லும் படம். ஹிந்தியில் வந்த 'எ வெனிஸ்டே' என்ற படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. அதனால் அந்த படத்தின் திரைக்கதைக்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராயும் அருகதை எனக்கில்லை. என்றாலும் உன்னைப்போல் ஒருவனின் திரைக்கதைப்பாணி நன்றாகவே இருக்கிறது. அடிப்படையில் நான் ஒரு கமல் சினிமாவின் வெறிப்பிடித்த ரசிகன் என்றாலும் அவரது எல்லா படங்களையும் போற்றி, ஆராதித்து புளகாங்கிதம் அடையும் மனப்பான்மை இல்லாதவன். கமலின் ரசிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வந்து இந்த படத்தை பற்றி பேசுவனேயானால், இதை ஒரு சமுதாய சீர்திருத்த கருத்தை/தேவையை வலியுறுத்தும் படமென்றே சொல்லுவேன். இது போல பல படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு 'எவனோ ஒருவன்' என்ற படத்தை கூறலாம். தனி ஒரு மனிதன் (கமல் சொல்லும் அந்த 'common man') சமூகத்தின் மேல் கொண்ட காதலினால் சட்டத்தை தன் கையில் எடுப்பதனால் வரும் பின்விளைவுகளை காட்டிய படம் 'எவனோ ஒருவன்'. ஆனல் அந்த படத்துக்கு கிடைத்த மரியாதையை/வரவேற்ப்பை நீங்கள் அறிவீர்கள்.


உன்னைப்போல் ஒருவனும் அந்த வகையிலேயே வருகிறது. படத்தின் கதையை நான் இங்கே சொல்லுவது எழுத்துலக தர்மம் ஆகாது. கோடிகளை கொட்டி எடுத்த அந்த திரைக்காவியத்தை நீங்கள் திரையில் கண்டுகளிப்பதே நல்ல சினிமாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு. ஆயினும் படத்தில் வரும் சுவாரசியமான சில சம்பவங்களை பகிர்வது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்று கருதுவதால் இங்கே சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.


கமலின் பெயர் வாக்காளர் அட்டையில் இல்லாமல் போனதை இங்கே நாசூக்காக சொல்லியிருப்பார். தன்னை 'common man' என்று சொல்லிக்கொள்ளும் கமலை மோகன்லால் கேட்பார் 'நீ என்ன கமான் மானா? இல்லை சுப்பர் மானா? (are you a 'common man' or superman?)என்று ' அதற்கு கமல் 'இல்லை நான் இன்விசிபிள் மான்(invisible man)' என்று சொல்லுவார். வாக்காளர் அட்டையில் பெயரில்லாத ஒருவன் இன்விசிபிள் மான் தானே என்று கேட்பார். அதில் அர்த்தம் இருக்கிறது. அதேபோல இன்னும் ஒரு காட்சியில் மோகன்லாலும், முதல்வரும் பேசிக்கொள்ளும் போது, மோகன்லால் சொல்லுவர், "எல்லாம் கடவுள் கையில்தான் உண்டு"(every thing is in god's hand) என்று. அதற்கு முதல்வர், "அது சிக்கலான கையாச்சே" என்று பதிலுரைப்பார். காலம் காலமாக கமல் தனது படங்களில் முன்வைக்கும் நாத்திக கருத்தின் வெளிப்பாடே இந்த வசனம்.


தமிழ் சினிமாவின் அடிப்படை விதிகளை மீறி தைரியமாக கமல் கொடுத்திருக்கும் ஒரு படமாகவே இதை காண்கின்றேன். நான்கு பாடல், இரண்டு சண்டைக்காட்சி, கிளாமர் ஹீரோயின் என்ற போர்முலாவை தாண்டி, கதாநாயகி இல்லாமல், படத்தில் வரும் எல்லோருக்கும் சம அளவு கனத்தை கொடுத்திருகிறார். தன்னை பின்நிலைப்படுத்தி சக பாத்திரங்களைக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது தமிழ் சினிமாவுக்கு புதியது. அதேபோல பாடல் காட்சிகள் இல்லாமல் பயணித்திருப்பதும் நன்றாக உள்ளது(உண்மையில் இந்தபடத்துக்கு பாடல் காட்சிகள் வைக்கமுடியாது). சரித்திரத்தை திரும்பிப்பார்தால், தமிழ் சினிமா ரசிகர்கள் இம்மாதிரியான முயற்சிகளுக்கு காட்டிய/ கொடுத்த ஆதரவு குறைவு என்றே சொல்லலாம். எனினும் கமலின் இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஒட்டுமொத்த சமூகமும் உணர்ந்து திருந்தினாலன்றி தனியொரு மனிதன் திருந்திப்பயனில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.

5 comments:

  1. கமல்...புதுமைகளின் சுரங்கம். சுட்ட படம் என்றாலும் அதை தனக்கேயுரிய பாணியில் அள்ளித் தெளித்திருப்பது அற்புதம்தான். ஆனாலும் பல விமரிசனங்களோடு “எம்மைப் போல் ஒருவன்” கமல் எம் கண் முன்னே விரிகிறார். மோகன்லால் மனதைக் கவர்ந்த பாத்திரம். ஹீரோ என்ற மாயைகள் இல்லை. ரொம்ப யதார்த்தமாக வந்துள்ளது. விமரிசனம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  2. சுதர்ஷன்,விமர்சனங்கள் மாறி மாறிக் கருத்துக்கள் சொல்கின்றன.அவரவர் ரசனைதானே !
    படம் இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
  3. நன்றி கதியால், படத்தில் என்னைக் கவர்ந்த விடயம் ஹீரோ என்ற மாயைகள் இல்லை. 'உலக நாயகன்', 'பத்மஸ்ரீ' என்ற பதங்கள் வராமல் 'kamal haasan ' என்று மட்டும் வந்ததே அதற்கு சான்று.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. ரசனை என்பது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபாடும். நான் தலையங்கத்திலேயே சொல்லிவிட்டேன். 'உன்னைப்போல் ஒருவன் - எனது பார்வையில்' என்று. எனக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம். மற்றவருக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் போகலாம். சிலபேருக்கு ஹீரோ எண்டால் நாலு பாட்டுக்கு ஆடனும், நாலு பேரை தூக்கி அடிக்கணும் எண்டு நினைப்பினம். அப்பிடி பட்டவைக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகலாம். இதில நீங்கள் எந்த ரகம் ஹேமா அக்கா?

    ReplyDelete