Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் - நமக்கு வேண்டும்


காலையில் வீட்டுக்கு காய் கறி வாங்கப்போகும் ஒருவன், மாலையில் வீடு திரும்புமுன் செய்யும் ஒரு திருவிளையாடலே உன்னைப்போல் ஒருவன். பத்து மணி நேரத்துக்குள் முடிந்துவிடும் ஒரு சம்பவம். முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்ற பழமொழிக்கிணங்க, தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதமே சரி என்பது படத்தின் ஆன்லைன். வழமையான தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதைப்பாணி. இன்று நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எதையும் செய்து முடிக்கலாம் என்ற நிலையில், இந்த கதையின் நாயகனும் ஒரு மொட்டைமாடியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலிஸையே, ஏன் தமிழ்நாட்டு அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் உத்தி சினிமாவுக்கு புதியது என்ற சொல்லலாம். பாட்டு இல்லை, சண்டையில்லை, கதாநாயகி கூட இல்லை. எல்லாவற்றையும் தாண்டி கமலின் டிரெட்மார்க் முத்தம் கூடயில்லை. ஆனாலும் படத்தை ரசிக்க முடிகின்றது. படத்தில் ஒரு வேகம் இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ளதான் வேணும். வளவளவென்று இழுத்தடிக்காமல், ஆங்கில படப்பாணியில் இரண்டு மணிநேரத்துக்குள் படம் முடிவது கனகச்சிதம்.


தமிழ் நாட்டில் ஆங்காங்கே குண்டு வைத்துவிட்டு, நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க கேட்கிறார் கமல். போலிஸ் தீவிரவாதிகளை விட்டாதா?, விடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நீங்கள் திரையில் தான் காணவேண்டும். போலிஸ் கமிஷனராக வரும் மோகன்லால் கமலுக்கு போட்டியாக நடித்திருக்கிறார். தான் ஒரு கேரளா மாநிலத்தவன் என்பதை சொல்லிடிகாட்டுவதில் என்ன அவசியம் வேண்டியிருக்கிறது என்று தெரியவில்லை. மலையாளம் கலந்த தமிழ் அழகாகத்தான் இருக்கிறது. கூடவே வரும் இரண்டு பொலிஸ்காரர்களும் பின்னி பிடலுடுக்கிறார்கள். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமன் தமிழ் சினிமாவில் அக்சன் ஹீரோகளுக்கு ஒரு ஆப்பு வைக்கலாம், வைக்காமலும் போகலாம். அதிகார மட்டங்களுக்கிடையே நடக்கும் சம்பாசனைகள் மிகவும் கூர்மையானவை. லக்ஷ்மிக்கு மோகன்லால் சொல்லும் பதில்கள் அருமை. அதற்காக இரா. முருகனுக்கு ஒரு 'சபாஷ்' சொல்லலாம். படம் முழுக்க கிளோஸ்அப் காட்சிகள். முதல்வர் என்று டம்மி பீசைக்காட்டாமல், நிஜ முதல்வரின் குரலை பாவித்தது நல்ல முயற்சி. முதல்வரின் வீட்டிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.


கடைசியில் கமல் கொடுக்கும் கொள்கை விளக்கவுரையில் காட்டும் உணர்ச்சிகள் ஏராளம். சோகம், இயலாமை, ஏக்கம், தவிப்பு, அழுகை என்று அத்தனையையும் காட்டி இறுதியில் நின்று, நிதானித்து கண்டிப்புடன் கூறும் அழகே தனி. "தீவிரவாதி என்று மிரட்டினால் பயத்துடன் கேட்கும் நீங்கள்(போலிஸ்), நான் ஒரு சாதரணன் என்று தெரிந்தவுடன் குரலை ஏற்றுகிறீர்கள், நானும் ஒரு தீவிரவாதி தான். தீவிரவாதத்தை ஒழிக்கும் தீவிரவாதி" என்ற வசனங்கள் பிரமாதம். தனது பெயர் வாக்காளர் அட்டையில் இல்லாமல் போனதையும் நாசூக்காக குறிப்பிட தவறவில்லை கமல். இரா. முருகனின் வசனங்கள் அருமை. பின்னணி இசைக்கும் ஒரு 'ஓ' போடலாம். சில இடங்களில் பின்னணி இசை மௌனித்திருபதும் அற்புதம். படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் உண்டு என்றாலும் கதைக்கு பொருந்துகிறது.


இந்த மாதிரியான படங்கள் வருவது இதுதான் முதல்தடவை அல்ல. ஆனாலும் வந்த படங்களுக்கு நடந்த சம்பவங்களை நாடறியும். உதாரணம், எவனோ ஒருவன். அவ்வாறு இந்தப்படமும் போகமல் இருப்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. கலைஞர்களின் ரசிப்புத்திறமை எப்போது ரசிகர்களுக்கு வருகிறதோ அன்று தான் இந்த மாதிரியான முயற்சிகள் வெற்றியீட்டும் என்பது எனது எண்ணம். உன்னைப்போல் ஒருவன் -New face of terror.

1 comment:

  1. //கதாநாயகி கூட இல்லை. எல்லாவற்றையும் தாண்டி கமலின் டிரெட்மார்க் முத்தம் கூடயில்லை.//
    ஏனூங்? கதாநாயகி இல்லாம முத்தத்த மாறருக்கா கொடுக்க முடியும்ங்?

    ReplyDelete