Saturday, September 5, 2009

அவளா? நானா??


இண்டைக்கு காலம (காலையில) 'வாயு புத்திரனின்' ஒரு மாதிரியான பக்கத்தை வாசிச்சுகொண்டிருந்தன். "ஒரு மாதிரியான பக்கம்" எண்டவுடன நீங்கள் தப்பா நெனைக்க கூடாது.. அது அவர் எழுதிற பதிவு.அவருடைய யாழ் கொழும்பு பிரயாணத்தை பத்தி தன்னுடைய நகைச்சுவை கலந்த பாணியில எழுதியிருந்தார். நல்ல இருந்திச்சு. இப்ப விஷயம் அதில்ல. அவர் சொன்ன விஷயம் ஒண்டு எண்ட மனசில பதிஞ்சிருந்தது. அதாவது கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் போட்டு திரும்ப வாறத்துக்கு விமானத்தில டிக்கட் எடுத்தால் ஒரு மாச சம்பளம் கரைஞ்சு போகும் எண்டு கவலைப் பட்டு கொண்டிருந்தார். அது எண்டால் உண்மை தான். அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யவும் முடியாது. இந்த விமான கட்டணம் தொடர்பாக பாரளுமன்றத்தில கூட கதைச்சவையாம். அங்க கதைச்ச ஒரு எம்.பி. ஒராள் சொன்னாரம் கொழும்பில இருந்து சென்னைக்கு போட்டு வாறத்துக்கு 12000 காணும், ஆனா உங்க பக்கத்தில இருக்கிற யாழ்ப்பாணம் போட்டு வாறத்துக்கு 25000 வேணுமாக் கிடக்கு எண்டு. அந்த மனிசன் சொன்னதில தப்பில்ல. ஆனால் யாருக்கு சொன்னது எண்டது தான் பிழை. எங்கட அரசாங்கத்தை பத்தி தெரியும் தானே. காசை குறைக்க மாட்டினம். பதிலுக்கு சென்னைக்கு போட்டு வாறத்துக்கு இருக்கிற காசை கூட்டி போட்டு சொல்லுவினம், இப்ப பாருன்கோ, சென்னைக்கு போட்டு வர 40000 , யாழ்ப்பாணம் போட்டு வர ஆக 25000 தானே எண்டு. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்ட கணக்கா போடும்

நான் அந்த அரசியல பத்தி கதைக்க வரேல்ல. நான் கதைக்க வந்த விஷயம் என்னவெண்டால் இப்ப விமான பயணங்கள் எண்டது பஸ் பயணம் மாதிரி மலிஞ்சு போட்டு எண்டத பத்தி தான். அட, அவசரப் படாதேயுங்கோ. இது நடக்கிறது இலங்கையில இல்லை, வெளி நாடுகளில. இந்தியாவில கூட இப்ப மலிவு கட்டண விமான சேவை நிறுவங்கள் இருக்கு. ஐரோப்பிய நாடுகளிலையும் இருக்கு. மலேசியாவில 'air asia' எண்டு சொல்லி ஒரு நிறுவனம் இருக்கு. சொன்னால் நம்ப மாட்டியள், கோலாலம்பூரில இருந்து சிங்கப்பூருக்கு போக வெறும் 39 ரிங்கிட்(மலேசிய காசு)தான். நான் ஒருக்கா அதில சிங்கப்போருக்கு போட்டு வந்தனான். விட்டில இருந்து ஏர்போட்டுக்கு போக டக்ஸிக்கு 35 ரிங்கிட் கொடுத்தது வேற கதை. ஆனால் பஸ்ஸில போறத்துக்கே நாப்பத்தஞ்சு,அம்பது ரிங்கிட் தேவைப்படும். அதோட பஸ்ஸில போக குறஞ்சது அஞ்சு மணித்தியாலம் தேவைப்படும். பஸ்சில போறதும் ஒரு சுகமான அனுபவம் தான். முந்தி ஓமந்தை, தாண்டிக்குளம் தாண்டி போற மாதிரித்தான் இதுவும் . மலேசிய மற்றும் சிங்கப்பூர் குடிவரவு/குடியகல்வு நிலையங்களில இறங்கி ஏற வேணும். இந்த சில்லேடுப்பிலும் பாக்க பிளேன்ல போனால் நல்லது எண்டு நினைச்சன்.

நான் சொன்னது ஒரு உதாரணத்துக்கு. இப்பிடி எல்லா இடத்துக்கும் போகலாம். இப்ப புதுசா கொழும்புக்கும் ஓடத்துவங்கிட்டாங்கள். முன்னுக்கே டிக்கட் பதிவு செய்து வைச்சால் கொழும்பில இருந்து கோலாலம்பூர் வந்து போக எங்கட காசுக்கு 15000 மிச்சம் என்ன. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு. மற்ற விமானங்களில தாறமாதிரி சும்மா சாப்பாடும் தண்ணியும் (தண்ணி எண்டால் விளங்கும் தானே) தரமாட்டினம். உள்ளுக்க கொண்டு திரிஞ்சு விப்பினம். வேணும் எண்டால் வாங்கலாம். வேண்டாம் எண்டால் கண்ணை மூடிக்கொண்டு தூங்கலாம். நான் ஏன் துங்கவேணும் எண்டு சொல்லுறன் எண்டால், நீங்கள் நித்திரை இல்லை எண்டால் அவையள் (அது தான் விமான பணிப் பெண்கள்) உங்களை பாத்து, "sir don't you like to have something?" எண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில கேப்பினம். ஆக்கள் வேற பாக்க அம்சமா இருப்பினம். என்னை மாதியான ஆக்கள் எண்டால் வேற வழியில்லாமல் இல்லை எண்டு மறுக்க முடியாமல் ஓம் எண்டு மண்டைய ஆட்டி வாங்கி போடுவம். அது வேற தண்டச் சிலவாப் போடும். அதுக்கு தான் சொல்லுறது அவை வாறினம் எண்டால் சத்தம் போடமல் நித்திரை மாதிரி கிடக்கவேண்டியது தான். உண்மையில பசிச்சால் சாப்பிடலாம். அடுத்தது போக்கிறத்துக்கு பெட் சீட் தரமாட்டினம். கதிரைக்கு முன்னால டிவி இருக்காது. மத்தப்படி எல்லாம் ஒண்டு தான்.

இப்படித்தான் நான் போகேக்கையும் ஒரு பெம்பிளை சாப்பாடு விட்டு கொண்டு வந்தா. எனக்கு பக்கத்தில இருந்த மனுசனும் மனிசியும் வங்கிச் சாப்பிட்டிசினம். நான் ஏலவே ஏர்போட்டில இருந்த subway ல சாப்பிட்டிட்டுத் தான் போனனான். டக்ஸிக்கு அநியாயமா 35 ரிங்கிட் குடுத்திட்டன் எண்ட கடுப்பு வேற. இதுக்க அவள் நிக்கிறாள் வாங்கு எண்டு கொண்டு. என்னுடைய மானத்த வங்கிறதில அவளுக்கு அவ்வளவு சந்தோசம் போல கிடக்கு. ஆள் வேற பாக்க செமையா இருந்தாள். என்ன செய்ய வேற வழியில்லாமல் ஒரு கோப்பியும் சன்விச்சும் வங்க வேண்டியத போச்சு. அதுக்கு 10 ரிங்கிட் வங்கிப்போட்டாள் அறுவாள்.என்ன தான் எண்டாலும் மற்ற விமான சேவை நிறுவனங்களோட ஒப்பிடேக்க இது சரியான மலிவு என்ன. இப்ப எங்கட பெடியள் ரண்டு பேர் மலேசியாவுக்கு வாறத்துக்கு இருக்கினம். அவையளும் இந்த மலிவு கட்டண விமானத்தில தான் வரபோகினமாம். அவையும் வந்த பிறகு நானும் அவங்களோட சேர்ந்து இங்க மலேசியாவில லங்காவி எண்ட தீவுக்கு போற பிளன்ல இருகிறன். அதுவும் இந்த மிளிவு கட்டண விமானத்தில தான். உண்மைய சொன்னால் பஸ்ஸில போறாத விட காசும் குறைவு, நேரமும் மிச்சம் என்ன. இந்த முறை நான் உள்ளுக்க சாப்பாடு வாங்கிற ஐடியா இல்லை. இந்த முறை அவளுகள் என்ன மாயம் மந்திரம் செய்ய போறாளுகளோ தெரியல. பாப்பம் கடைசில வெல்லுறது நானா இல்லை அவளா எண்டு..

5 comments:

  1. ம்ம்ம்ம்..பார்ப்பம் யார் வெல்லுறீங்கள் என்டு...உண்மைதான் கொழும்பு-சென்னை 13000 இலங்கை ரூபாய். கொழும்பு-யாழ்ப்பாணம் 23000 இலங்கை ரூபாய். இதுதான் உலகமய்யா...? யாரொடு நோகோம்...யார்க்கெடுத்து உரைப்போம்..!!

    ReplyDelete
  2. சுதர்ஷன் நல்ல அழகா இருக்கு உங்க்ட பெயர்.நன்றி மாத்தினதுக்கு.

    எங்கட தமிழைப் போட்டு உலுக்கு உலுக்கெண்டு கலக்கி வைக்கிறியள் தம்பி.பாப்போம் அடுத்த பயணத்தை.சொன்னா சொன்னபடி இருக்க வேணும் கண்டியளோ !

    ReplyDelete
  3. சுதர்ஷன் word verification எடுத்துவிடுங்கோ.
    பின்னூட்டம் இட வசதியாய் இருக்கும்.

    ReplyDelete
  4. நன்றி கதியால், நீங்கள் சொன்னது போல, யாரிட்ட சொல்லியளுவம் நாங்கள்.. எல்லாத்துக்கும் கலாம் பதில் சொல்லும் எண்டிட்டு இருப்பம்.

    ReplyDelete
  5. நன்றி ஹேமா அக்கா (அக்கா எண்டு சொல்லலாம் தானே, என்னெண்டால் நீங்கள் என்னை 'தம்பி' எண்டு சொன்னபடியால). என்ன தான் எண்டாலும் எங்கட தமிழ் ஒரு சுவாரசியமான தமிழ். வெற்றி தோல்வி எல்லாம் சகயம். எதுக்கும் நான் போட்டு வந்தது சொல்லுறனே யார் வெண்டது எண்டு.

    ReplyDelete