Thursday, December 17, 2009

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு புயல் மறுபடியும் மையங்கொள்ள இண்டைக்கு தான் பருவம் வந்திருக்கு. எழுதிறத்துக்கு பல விடயங்கள் இருந்தும் நேரம் கிடைக்காததால எழுத முடியல. ஏன், என்னுடைய வலைப்பூவை கூட பாக்க முடியலை. சரி எண்ட பிரச்சனைகளை விடுவம். எண்ட பிரச்சனைகளை விட்டிட்டு வேற என்ன கண்றாவியை எழுத போறான் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது.

இது வந்து பல விமர்சனங்களுக்கு உள்ளாக கூடிய விடயங்கள் தான். எனினும் எனது மனதுக்கு பட்டதை நான் உங்கள் முன்னே வைக்கிறேன். அண்மையில் எனது நண்பர் ஒருவர் எழுதிய விடயத்தை படித்தேன். அதுக்கு வந்த விமர்சனங்களை படித்த போது, எம்மவர்கள் விளக்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எனினும் சில விளக்கங்கெட்ட விசமிகள் இன்னும் உயிருடன் இருப்பது வேதனையை அளிக்கிறது. இவர்களுக்கு பகுத்தறிவு வராதவரை பல மனிதர்கள் தங்களை தாங்களே சாமியாராக்கி கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
நான் சொல்லவந்த விஷயம் சாமியாராகும் மனிசர்களை பற்றியில்லை. ஏற்கனவே சாமியார் எண்டு பல பேரால் ஏற்றுகொள்ளப்பட்ட அந்த கடவுள்களை சொல்லி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை பற்றித்தான்.
பொதுவாக கோவில்களுக்கு போவதை முடிந்த அளவுக்கு தவிர்த்து கொள்பவன்தான், இருந்தாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் கோவிலுக்கு போகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். சரி போய் தான் பார்ப்பமே எண்டு போனால், அங்க இருந்த அறிவிப்பு பலகையை பார்த்த போது எனக்கு கோவில் என்ற எண்ணமே உண்மையில் வரவில்லை. ஏதோ, வியாபர தலத்துக்குள்ள போன உணர்வு தான் வந்தது.

அந்த பலகையில கிடந்த விஷயம் என்னவெண்டால், வாற அடியார்கள் (நல்ல ஒரு பெயர் வச்சிடுவான்கள், அடியார்கள், அன்பர்கள், பக்த கோடிகள் எண்டு) எல்லாருக்கும் ஒரு விண்ணப்பத்தை விடுத்திருந்தார்கள். தாங்கள் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதாகவும், அன்பர்கள் எல்லாரும் தங்களை நிரந்தர அல்லது சாதாரண உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் படியும், அதற்கான கட்டண விபரங்களையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். அதுக்கு ஒரு offer குடுத்திருந்தார்கள் பாருங்கோ, அதுதான் highlight. அதாவது நிரந்தர உறுப்பினராக சேர்ந்தால், வருடத்தில் ஒருதடவை சங்காபிஷேகம் இலவசமாம், சாதாரண உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு அர்ச்சனை இலவசமாம்.

கடவுளிட்ட போறவை எல்லாருமே தங்களுக்கு காசுவேணும், வீடுவேணும் எண்டுதானே கேக்கிறவை. வேற என்ன பெரிசா கேக்கிறவை. அதுகளிட்ட போய், கடவுளுக்கே காசில்லை, காசு தாங்கோ எண்டு கேக்கிறது சிரிப்பாக்கிடக்கு. பிறகு பூசை எல்லாம் முடிஞ்ச பிறகு பாத்தால், ஐயர் சொல்லுறார், அடியார்கள் அனைவரும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கட்டாம் எண்டு. அப்பத்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, என்னடா கோயில் நடத்தவே காசில்லை எண்டு பிச்சை எடுகிறாங்கள், பேந்து சனத்துக்கு சும்மா சாப்பாடு குடுகிறாங்கள். எப்பிடி இவங்களால முடியுது எண்டு பெரிய சந்தேகம் வந்து தலையே வெடிச்சிடும் போல கிடந்தது. சரி எண்டு கூட்டிக்கொண்டு
போனவையிட்டையே கேட்டன், எப்பிடி இவங்களால முடியுது எண்டு. அப்பத்தான் ஒரு உண்மை தெரிந்தது. லண்டனில கோயில் நடத்திறது எண்டு கவுன்சில்ல பதிஞ்சால், கவுன்சில் மாசாமாசம் காசு குடுக்குமாம். அது ஒரு பெரிய தொகை. காசு குடுக்கிறவன் சும்மா குடுப்பனூ. கணக்கு கேப்பன் எல்லே, அதன் இந்த அன்னதான நாடகம். அன்னதானம் எண்டு சொல்லியே கணக்கை முடிச்சிடுவான்கள் எல்லே எங்கட வித்துவான்கள்.

ஆக மொத்தத்தில கவுன்சில் காசு ஒரு பக்கம், அன்பர்கள் குடுக்கும் லஞ்சம் (எனக்கு கடவுள் தருவார் எண்டு , அல்லது கடவுள் தந்தவர் எண்டு நினைச்சு கடவுளுக்கு காசு குடுக்கிறதை லஞ்சம் எண்டு தானே சொல்லவேணும்) மறு பக்கம் எண்டு வருமானம் ஓ..ஹோ.. இப்ப நானும் இடம் பாத்துகொண்டு திரியிறன். ஆகவே தயவு செய்து இதை வாசிக்கும் இலண்டன் வாழ் அன்பர்கள்( அப்பிடித்தானே சொல்லவேணும்) எதாவது நல்ல இடம் இருப்பின் அறியத்தரவும். ஒரு ஐந்து மைல் சுற்று வட்டாரத்துக்கு கோவில்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லது. என்னடா இவன் இப்பிடி மாறிட்டனே எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. என்ன செய்ய, நானும் வாழ்கையில செட்டில் ஆகவேண்டாமே, அதன் கஷ்டபடாம முன்னேறுவம் எண்டு முடிவுத்திட்டன். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இங்க நிறைய அன்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள் எண்டு நம்பிறன். இந்த நம்பிக்கையில தானே இங்க இத்தினை கோவில்கள் முளைச்சிருக்கு. வெகுவிரைவில் இலண்டனில் புதிய கோயிலை நீங்கள் எதிர்பார்க்கலாம். வரேக்க ஆளாளுக்கு ஒரு 500 பவுன்ஸ் கொண்டு வாங்கோ. உங்களுக்கு ஒண்டு என்ன இரண்டு சங்காபிஷேகம் நடத்திதாறன். இது சத்தியம்.