Friday, March 21, 2014

ஊரே அம்மணமாத் திரியேக்க கோமணம் கட்டினவன் கோமாளியாம்!!

நீண்ட நாளாக மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயம் 'யாழ்ப்பாணத்து பொருளாதார மந்தம்' மறுபடியும் உடைஞ்ச ரெக்கோட் கதைதான். வேற வழியில்லை, கீழபோகமல் மேலாட்டமாக எழுத முடியவில்லை என்பதே உண்மை. 

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை கந்தபுராணக் கலாச்சாரம் எண்டு சொல்லி ஞானதேசிகன் சேர் படிப்பிச்சுக்கொண்டிருக்க,
"அப்பிடி எண்டா என்ன சேர், முருகனை மாதிரி நாங்களும் இரண்டை கீப்அப் பண்ணலாமா?" என அடியேன் ஆர்வ கோளாறில கேட்டுத்துலைக்க, அந்த பாடவேளை முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வேண்டியதாகிப் போனது. ஞானதேசிகன் சேர், நடந்தாலே புல்லுக்கும் பூமிக்கும் வலிக்கும் என்று நினைப்பவர். அவருடைய 'சுப்ரீம் கோர்ட்டில' அதியுச்ச ஆயுள் தண்டனையாக ' நாட்டாமை ஊர விட்டு ஒதுக்கி வைக்கிற' மாதிரி அந்த பாடவேளைக்கு வகுப்பை விட்டு ஒதுக்கி வைப்பதை தாண்டி வேறேதும் வழங்கியதில்லை. அதுவும் பிரிண்சி நகர்வலம் வெளிக்கிடுறதை கண்டால் 'பொது மன்னிப்பு' அடிப்படையில ரீ-என்ரி குடுத்திடுவார். இவரைப் போலவே அடிதடிக் கலாச்சாரத்தில நம்பிக்கையில்லாத இன்னும் ஒரு நபர் மறைந்த கணித ஆசான் அருளானந்தசிவம் சேர். அவரோட நடந்த சம்பவங்களை எழுதினால் சொல்லவந்தது சொதப்பிவிடும் என்ற பயம் எனக்கு. 

யாழ்ப்பாணத்துக்கு என்று சில பழக்கவழக்கங்கள் இருந்ததாக நினைவு. குடுத்த வாக்கை காப்பதும் அதில் ஒன்று. வாகனம் ஒண்டை விலைமதிச்சு அச்சவாரம் குடுத்திட்டால், அடுத்தவன் வந்து கூடுதலாக் கேட்டாலும் குடுக்காத வியாபாரிகளை கண்ட அனுபவம் உண்டு. குடுக்கல் வாங்கல்களில் குறைவிட்டவர்கள் மிக மிக குறைவென்றே சொல்லலாம். மீட்பு நீதி கேட்டபோது கூட, சனம் மண்ணை அள்ளி திட்டினதே தவிர, பிறகு கப்சிப்பெண்டு கேட்ட தொகையை குடுத்திட்டுத்தான் போனதுகள். 

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தில் நடக்கும் 'குடுக்கல் வாங்கல்' சம்பவங்களை கேட்டால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தென்படுகிறது. சுயதொழில் செய்து முன்னேறும் நோக்கத்தோடை 'தாய்நாட்டுக்கு' படையெடுத்த சில மித்திரர்கள், கையைச்சுட்டுக்கொண்டு மறுபடியும் திரவியந்தேட திரைகடலோடிவிட்டனர். கைக்காசைப் போட்டு செய்த வேலைக்கான குடுப்பனவுகளே கொடுக்கப்படாத நிலையில் அடுத்த வேலையை எப்படி அணுகுவதென்ற அவர்களின் கேள்விக்கு பதில கூகிள்ளயும் தேடினேன், இல்லவே இல்லை. 

சண்டை முடிந்த பிறகு வடக்கை நோக்கி நிதி நிறுவனங்கள் நடத்திய படையெடுப்பின் விளைவு தான் பாரதூரமானதாக அடியேனின் ஊனக்கண்களுக்கு புலப்படுகிறது. என்றோ ஒர்நாள் நட்ட விதைக்கு இன்றும் அறுவடை செய்யத்தக்க விந்தையான விவசாயம். இந்த இடத்தில்தான் குரங்கு வியாபாரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

காட்டுக்கு பக்கத்தில ஒரு ஊராம். ஒருநாள் ஒரு வியாபாரி ஊருக்கு வந்து "எனக்கு குரங்குகள் வேண்டும்,  ஒரு குரங்குக்கு பத்து ரூபா தரலாம், யார் வேண்டுமானாலும் காட்டுக்கு போய் குரங்கு பிடித்து தரலாம்" என்று open request விடுத்தானாம். எல்லாச்சனமும் 'சும்மா' காசு வருகிதெண்டு குரங்கு பிடிக்க கிளம்பீட்டுதாம். கொஞ்ச நாளையில அந்த கொள்வனவாளன் விலையை பத்தில இருந்து இருபது ஆக்கினானாம். சனத்துக்கு வலுஞ்சந்தோசம். ஓசிக்காசுக்கு ஆருக்கு தான்
ஆசையில்ல? இப்பிடி கொஞ்ச நாள் போக, காட்டுக்க குரங்கு அருகி பிடிபடுற குரங்கு குறையத்தொடங்கிட்டுதாம். கொள்வனவாளனும் விடுவதாய் இல்லை, ஐஞ்சு பத்தாக் கூட்டி கடைசில தலைக்கு சுளையா நூறு ரூபா ஆக்கிப்போட்டானாம். ஆனல் சனம் பிடிக்க காட்டுக்க குரங்கில்லாம போட்டுதாம். 

கதை இப்பிடி போக ஊருக்கு ஒரு நாள் ஒரு வேற மொத்த வியாபாரி வந்தானாம். ஒரு லொறி முழுக்க குரங்கை கொண்டுவந்து "ஒண்டு ஐம்பது, ஒண்டு ஐம்பது" எண்டு கூவிக் கூவி விற்றானாம். 'புத்திசாலி' சனமும் ஐம்பதுக்கு வாங்கி நூறுக்கு வித்தால் அடுத்த பில்கேட்ஸ் தாங்கள் தான் எண்ட எண்ணத்தில அடிபட்டு குரங்கை வாங்கிச்சித்துகளாம். ஆன கடைசில அந்த கொள்வனவான் தன்னுடைய ரிக்குயமெண்டை மாத்தி, "இனி குரங்கு வேண்டாம், கரடி பிடிச்சு கொண்டாங்கோ" எண்டானாம். வாங்கின குரங்கெல்லத்தையும் விக்க வழியில்லாத அப்பாவிச்சனத்துக்கு தாங்கள் பத்துக்கும் இருபதுக்கும் வித்த குரங்கைத்தான் தங்களுக்கே ஐம்பதுக்கு விற்றதை அறிய வாய்ப்பே இருக்கவில்லை. இருந்தும் முயற்சியில் சற்றும் மனத்தளராத விக்கிரமாதித்தர்கள் மீண்டும் கரடி பிடிக்க காட்டுக்கு போனார்களாம். 
(இப்ப என்னத்துக்கு இந்த கதையை சொல்லி நேரத்தை மினைக்கடுத்திறாய் எண்டு கேக்கபடாது )

உற்பத்திக்கான கேள்வியானது, குடிசனப்பரம்பல் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றில் தங்கியிருக்கும் என சர்மா சேர் ஓ.ல் படிக்கேக்க சொன்னதாய் ஒரு ஞாபகம். சில பல அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக மக்கள் பிரதேசங்களை விட்டு வெளியேறி, சனத்தொகை நலிந்து வரும் ஒரு பிரதேசத்தில் ஒரு செயற்கையான 'பொருளாதார ஊக்கத்தை (economical boom)' ஏற்படுத்தி அதிகப்படியான முதலீட்டை ஊக்குவித்து, ஆசை காட்டி மோசம் செய்ததான நிலை தான் தற்போது உருவாகி உள்ளது. அவனவன் ஆளாளுக்கு  அம்பிட்ட வாகனத்தை 'தவணை முறை கொடுப்பனவில்' வாங்கிவிட்டு, தவணைப் பணங்கட்ட முடியாமல் தவிக்கும் நிலை.

 காணிகளின் விலை IPL ஒக்சன் மாதிரி கணக்குவழக்கில்லாமல் கூடிக்கொண்டே போனது.  கட்டங்கள் எழுந்த மானத்துக்கு எழுந்தன.  "எங்கெங்கு காணிணும் சக்தியடா" மாதிரி இங்க 'எங்கெங்கு காணிணும் கன்கிறீட் காடுகளடா!!' கொள்வனவு சக்தியை மீறிய கொள்வனவுகள் நடைபெற்றன. வங்கியில் கடன், வட்டிக்கு கடன் என ஒரு சமூகத்தை அநியாயத்துக்கு கடனாளி ஆக்கிவிட்டன ஆக்கிரமிப்புக் கம்பனிகள். 

கேட்டால், 'அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நிலையில் இவ்வாறன மந்தநிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று, உங்கள் ஐயங்கள் அனாவசியமானவை' என்று கேட்ட வாய்க்கு போட்டனர் பூட்டு. சிங்கப்பூர் வளரேக்கயும் இப்பிடித்தான் சிக்கல் பட்டது எண்டு விளக்கம் வேற. சிங்கப்பூரிண்ட strategy வேற, எங்கட வேற எண்டு எப்பிடி புரிய வைப்பேன்? எல்லாரும் என்ரப்புரோணர் (entrepreneur) ஆகவேண்ணுமா? ஆகுங்கள். ஏன் வியாபாரக் கந்தகளாகவும் கூட ஆகலாம். தப்பேயில்ல. ஆனால் risk எடுக்கேக்க கவனமா calculated risk எடுக்க வேணும் கண்டியளோ! இல்லாட்டி எல்லாம் கவிண்டு கொட்டிண்டிடும். அங்க சிலபேருக்கு வாங்கின வாகனத்துக்கு டீசல் ஊத்தவே காசில்லாத நிலையாம். மேலும்,  யாழ்ப்பாணத்தில் கொடிகட்டிப் பறந்த சில வர்த்தகர்கள் இப்ப 'ஹர்பஜன் சிங்' கணக்கா காணமல் போனதாகவும் கேள்வி. ஏன் இந்த நிலை? 

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்ந்த இன்னுமோர் காந்தப்புலக் கோடு ; பல்தேசியக் கம்பனிகள். சந்திக்குச் சந்தி கடைவைச்சிருந்த அண்ணைமார் கனபேருக்கு அது பலத்த அடி. வயல் தோட்டம் செய்தவைக்கும் வருமானமில்லை. சிறிமாவோவின் 'தன்னிறைவு' எங்க போனதெண்டே தெரியேல்ல. பொலன்னறுவயில இருந்து வாற அரிசியால, ஊர் அரிசிக்கும், மொட்டக்கறுப்பனுக்கும் மார்க்கட்டில அடிமாட்டு விலை. இப்பிடியே போன விவசாயத்தையும், வணிகத்தையும் நம்பி வாழும் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக  என்ன செய்யும்? நடுத்தெருவுக்கு தான் வரவேண்டுமா? 'கூட்டுறவே நாட்டுயர்வு' என மே தினங்களில் மட்டும் கோசமிடும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் என்னத்தை நோக்குகின்றன? இதுதான் வடக்கின் வசந்தமா? என்றேல்லாம் இன்னும் எழுத கை நீளுதுதான், ஆன அங்கயும் போய் வரவேணும் என்ற சுயநலம் அடிவயித்தில புளியக்கரைக்கிறதால இதோட நிப்பாட்டுவம். 

(வேலையில 'கொலிடே' எடுத்தால், எங்கயாச்சும் 'கொலிடே' போயிடணும். இல்லாட்டி கொழுப்பெடுத்து இப்பிடி தான் தேவையில்லாத வேலை பாக்க தோன்றும். கடைசிவரைக்கும் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமெண்டு விளங்கேல்ல எல்லோ? )
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம். 

1 comment:

  1. சுதர்ஷன் நீ சொல்றது சரிதான்.தின்னாம குடிக்காம முந்தி எங்கட சனம் காசை சேத்து அவச்சுழி சீதணம் எண்டு பேரில குடுக்கறத இப்ப லீசிங் காறன் கொண்டு போறான்.சுடுதண்ணி போத்தல் தொடங்கி சுசுக்கி ஸ்விப்ற் கார் வரைக்கும் லீசிங்.எங்க உருபடுறது.

    ReplyDelete