Friday, August 28, 2009

மதம் என்னும் மதம் ஓயட்டும்

மதம், உலகில் உள்ள சகல மக்களாலும் அறியப்பட்ட ஒரு பொதுச் சொல். மனித இனத்தின் தோற்றம் தொட்டே வழிபாடு எனும் ஒரு செயலும் இருந்து வருகின்றது என்பதை பண்டைய ஆய்வுகளின் மூலமாக அறிய முடிகின்றது. ஆதி காலத்தில் இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சிய மனிதன் அதை தன்னிலும் மேலான ஒரு சக்தியாகக் கருதி வழிபடத்தொடங்கினான். ஆக ஒரு வித பயவுணர்வின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ளும் முகமாக இயற்கைச் சக்திகளான மழை, இடி, மின்னல், நெருப்பு, காற்று ஆகியவற்றை கடவுளாக உருவகித்து வழிபட்டு வந்தான். நாகரீக வளர்ச்சிக்கு இணங்க அவனின் வழிபாட்டிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அருவ வழிபாடு உருவ வழிபாடாக தோற்றம் பெற்றது. கடவுள்கள் தோற்றம் பெற்றனர். தங்களை காக்கும் சக்தியாக உருவகித்து அவர்களுக்கு உருவம் ஒன்றை கற்பனை செய்து வழிபடத்தொடங்கினான். இதுவே மதம் என்ற ஒன்றின் ஆரம்ப கட்டமாகும். இதுவே இந்து மதம் என்று அறியப்படுகின்றது.

இவ்வாறு தோற்றம் பெற்ற இந்து மதத்தில் காலப்போக்கில் பல பிளவுகள் ஏற்பட்டன. சைவம், வைஷ்ணவம், காணபத்தியம், கெளமாரம், செளரம், சாக்த்தம் என்று ஆறு சமயங்களாக பிளவு பட்டன. இந்த சமயங்களினிடையே பல்வேறுபட்ட பிரச்சினைகள் நடந்தமைக்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளன. உதாரணத்திற்கு சிவனை கடவுளாக கொண்ட சைவமும், விஷ்ணுவை கடவுளாக கொண்ட வைஷ்ணவமும் தமக்குள் மோதிக்கொண்டதாக கூறப்படும் சம்பவங்களை பழைய இதிகாசங்கள் மற்றும் புரானம்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இது போக, இந்தப் பிரிவு போதாது என்று இந்து மதத்திலே குறைகள் உள்ளன, அவை மக்களை சரியான வழியில் வழிநடத்தவில்லை என்று கூறிக்கொண்டு பௌத்தமும், அதுவும் சரியில்லை என யூதமும், அதிலும் குறை என்று கிறீஸ்தவமும், அதுகூட முழுமை இல்லையெனக் கூறிக்கொண்டு இஸ்லாமுமாக இன்று பல்வேறுபட்ட மதங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இந்த எல்லா மதங்களினதும் குறிக்கோள் எமது சக்திக்கு அப்பாற்பட்டதாக கருதப்படும் கடவுளை அடைவதற்கான வழியை காட்டுவதே என்று சொல்லப்படுகிறது. கடவுள் என்று சொல்லுமிடத்து, எம்மால் அறியப்படமுடியாத, எமது சக்தியை மிஞ்சிய ஒரு சக்தியையே குறிக்கின்றது. அவ்வாறு எம்மிலும் விஞ்சிய ஒரு சக்தி உண்டென ஒப்புக்கொள்ளுமிடத்து, அது ஒரு கடவுளாக மட்டும் இருக்கமுடியுமே அன்றி கடவுள்கள் என பன்மையாக இருப்பது சாத்தியம் அற்றதாகின்றது. இவ்வாறன ஒரு முடிவுக்கு நாங்கள் வரும்போது, மேற்கூறியதை போன்ற பல்வேறுபட்ட மதங்களும்; சிவன், விஷ்ணு, இயேசு, அல்லா, புத்தன் என்னும் பல்வேறுபட்ட கடவுள்களும் இருப்பதாக சித்தரிக்கப்படும் விதம் பகுத்தறிவு கொண்ட எமக்கு ஒரு நம்பகமில்லத்தன்மையையே தோற்றுவிக்கின்றது.

நான் இங்கு கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என்று வாதிட வரவில்லை. எம்மில் பெரும்பான்மையான மக்களால் நம்பப்படும் அந்த கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை பற்றியே வாதிட வருகின்றேன். இன்று உலகில் நடைபெறும் கொலைகள் வன்முறைகளில் 80 சதவிகிதமான பங்கு கொலைகள் மதத்தின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன எனது வருத்தத்திற்குரிய விடயமாகும். கிறீஸ்தவமும் இஸ்லாமும், இஸ்லாமும் இந்துவும் மூதிக்கொண்டதற்கான சாட்சிகள் நிறையவே உள்ளன. மும்பை கலவரம், குஜராத் கலவரம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அல்லாவுக்கு இருந்த கோயிலை இடித்துவிட்டு அதிலே ராமருக்கு குயில் கட்டுவதில் என்ன தர்மம் இருக்கின்றதோ தெரியவில்லை. பலஸ்தீனமும், இஸ்ரேலும் இன்றும் முட்டி மோதிக்கொள்ளும் சூட்சுமமும் இந்த மதமே என்பது அனைவரும் அறிந்த இரகசியம். இந்த மதவாதங்கள் சம்பந்தமாக பல திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன, வந்த வண்ணமும் உள்ளன.

அண்மையில் வெளிவந்தது 'ஆஸ்கார்' விருதை வென்ற "Slumdog Millionaire" என்ற படத்தில் ஒரு வசனம் வரும்.கதாநாயகனால் சொல்லப்படும் அந்த வசனம் இதுவே "If it wasn't Raaman and Allah we still have our mother". அதன் அர்த்தம் யாதெனில், ராமனும் அல்லாவும் இல்லாமல் இருந்திருந்தால் என் தாய் இன்றும் உயிரோடு இருந்திருப்பாள் என்பதேயாகும். மதத்தின் மதத்தை எவ்வளவு எளிமையாக சொல்லப்படுகின்றது. அந்த ஒரு வரி விடயம் எம்முள் ஆயிரம் கேள்விகள் எழுப்புகின்றது என்பதில் ஐயமில்லை. உலகில் உள்ள சகல ஜீவராசிகளிடமிருந்தும் வேறுபட்டு உன்னதமான நிலையில் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ள, பகுத்தறிவுள்ள மனிதன் இன்னும் மதம் என்னும் அறியாமையில் மூழ்கி நடாத்திக்கொண்டிருக்கும் வன்முறைகளையும் பார்க்குமிடத்து நாங்கள் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எம்மை விட அறியு குறைந்த விலங்குகளுக்கு இப்படி மதங்கள் என்ற கோட்பாடுகள் இருக்குமா என்று ஆராயுமிடத்து, அவ்வாறு இல்லையென்றே சொல்லமுடிகிறது. அதனால் தான் அவை தமக்குள் தாமே மூதிக்கொல்லாமல் இருக்கின்றனவோ என்ற ஐயம் எம்மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.

இவ்வாறு எங்களை குழப்புகின்ற சந்தேகங்களுக்கு விடை காண முற்படும்போது, நாங்கள் இந்த பூமியிலே பிறந்ததன் நோக்கம் என்ன என்று அறிய முற்படும்போது, சேவை என்ற ஒரு வார்த்தை நமக்கு தென்படுகின்றது. இதையே மறைந்த அன்னை தெரேசாவும், மறைந்த இளவரசி டயானாவும் எமக்கு சொல்லிவிட்டு சென்றார்கள். மதம் என்ற ஒரு சிறிய போர்வைக்குள் சிக்காமல், அதை விட்டு வெளியே வந்து, மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனோபாவத்தை வார்ப்போம் என்று உறுதி பூணுவோம். இந்த சந்தர்ப்பத்திலே சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு கூற்றை நான் மீட்டிப்பார்க்க விரும்புகின்றேன். "நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்."


5 comments:

  1. ம்ம்ம்...நல்லதொரு பார்வை...!சிந்திக்க தூண்டும் விடயம். வாலிபக் கவிஞர் வாலி சொல்லுவார்..."ஆலயத்தில் யானைக்கு நாமம் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்சினையில் இருந்த யானை மதம் பிடித்து ஓடிவிட்டது என்றனர். இல்லை இல்லை யானை மதம் பிடிக்காமல் ஓடிவிட்டது" கடவுளும் பிரச்சினை இல்லை.. மதமும் பிரச்சினை இல்லை...ஆனால் அவற்றை வழிநடத்தும் பிரமுகர்களால்தான் இவ்வளவு தகறாறும். வாழ்த்துக்கள் தொடருட்டும்.

    ReplyDelete
  2. நன்றி.... எனக்கு வோட்டு அளித்து 'tamilish' இல் ஏற்ற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  3. நல்ல பதிவு.வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி சுரேஷ் குமார்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்... தொடர்க உங்கள் கொள்கை

    ReplyDelete