Thursday, March 27, 2014

அப்பாவும் நானும் அங்கஜனும்!

ஓவரின் இறுதித் தறுவாயில் அடுத்தடுத்து இரண்டு விக்கட்கள். "இங்கிலண்டுக்கு சான்சே இல்லை " என்ற என் கூற்றை over the phone இல் ஒரேயடியாக நிராகரிக்கிறார். நான் எழுதிய 'எதுவும் நடக்கலாம் இங்கே' வை எனக்கே மொழிபெயர்க்கின்றார். இந்த சம்பாஷனை நடந்து கொண்டிந்தபோது நேரம் ஐக்கிய இராச்சிய நேரப்படி பிற்பகல் மூன்றரை இருக்கலாம். பெரும்பாலும் என் கூற்றுக்களை அப்பா ஆமோதிப்பதில்லை என்றே சொல்லலாம். பல சமயங்களில், சந்ததி இடைவளியே இதற்கு காரணம் என்று நான் சாந்தமாகி விடுவதுண்டு. இன்று கடைசியில் என்னவோ அப்பாவின் நிராகரிப்பு நிஜமாகிப்போனது. 

என்னைப்போலவே அப்பாவுக்கும் கிரிக்கட் என்றால் அலாதிப்பிரியம் என்று எழுதினால் அவையடக்கம் அற்றதாகி விடும் என்பதால், அப்பாவைப்போலவே எனக்கும் என்று மாற்றி வாசித்துக்கொள்ளுங்கள். நன்றி! 

அது யாழ்ப்பாணத்தின் இருண்ட காலம். இதுகாரும் பெருநிலப்பரப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த அப்பா குடாநாட்டிற்கு மாற்றலாகி வந்த நேரம். அந்நாட்களில் வடக்கு முற்றத்தில் தென்னை மட்டையில் செய்த bat கொண்டு நானும் அவரும் ஆடியதை மறக்க இயலாது. நானாக விலகிச்செல்லும் வரை என்னை அவரால் அவுட்டாக்க முடியாது. அலாப்பல் ஆட்டம் தான், ஆனாலும் அவர் ரசிப்பார். 

அந்தநேரத்து யாழ்பாணக்கிரிக்கட் என்றால் under 19 school கிரிக்கட் தான். எனக்கோ கிரிக்கட் விவரம் தெரியாத வயது. இருந்தாலும் அவர் விடுவதாய் இல்லை. கிரிக்கட் பார்க்கவும், கம்பவாரிதியை ரசிக்கவும் பழக்கியவர் அவரே. நன்றாக ஞாபகம் இருக்கிறது; 1993 பிக் மட்சை மத்திய கல்லூரி மைதானத்தின் மணிக்கூண்டு கோபுர முனையிலிருந்து அப்பாவின் தோள்களில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தது. அன்றே அவரை விட ஒருபடி  மேலேபோய் பாரத்ததாலோ என்னவோ இன்றும் அவரின் பார்வைக்கோணமும் என் பார்வைக்கோணமும் பலசமயங்களில் ஒன்றுவிட்ட கோணங்களாக அமைந்து விடுவதுண்டு. 

95/96 ல் இடம்பெயர்ந்த நேரங்களில் எமது பொழுதுபோக்கு உலக கிண்ண போட்டி நேர்முக வர்ணணையை கேட்பது ஒன்றே. ஆங்கில  மற்றும் சிங்கள வர்ணணை அடியேனுக்கு அலர்ஜி ஆகையால் தமிழல் மொழிபெயர்க்க வேண்டிய பணியும் அவருக்கு. அந்நேரத்தில் எனக்கும் அவருக்கும் இடையே எந்த அணி வெல்லும் என்ற ஒரு பந்தயம் வேறு. நான் 'கடா கடா' என்றால் அவர் 'உளக்குப்பால் உளக்குப்பால்' என்பார். கடைசியில் பந்தயத்தில் நான் வென்று, இன்றுவரை அந்தப் பந்தயக்காசு நிலுவையில் இருப்பது வேறு கதை. 

கவாஸ்கர், குண்டப்பா விஸ்வனாத், கபில் தேவ் தான் அவரின் ஆஸ்தான வித்வான்கள். அதிலும் GV மீது அளப்பரிய அன்பு.  "கவாஸ்கருக்கே குண்டப்பாவை பிடித்ததால் தான் தன் தங்கையையே கட்டிக்கொடுத்தார்" என்று பழைய கதை எல்லாம் சொல்லுவார்.  T20 தொடங்கிய போதும் "டெஸ்ட் மட்சுக்கு இனி மவுசில்லை" என்ற என் கூற்றை என்ன தீரக்க தரிசனத்தோடு நிராகரித்தார் என்று தெரியவில்லை. ஆனால் சொன்ன உதாரணம் கொஞ்சம் மெய்சிலிர்க்க வைத்தது. ஆதாகப்பட்டது, "ஆதி மொழி தமிழுக்கும் அழிவில்லை, அஃதே போல் ஆதியில் தோன்றிய டெஸ்டிற்கும் அழிவில்லை".  அவர் ஐஞ்சு நாள் டெஸ்டும் பார்ப்பார், தடாலடியாக ரசனயை மாற்றி IPLலும் பார்ப்பார். கேட்டால் கமலைப்போல "புதுப்புது டெக்னாலஜி வரேக்க நாமளும் அதை அடாப்ட் பண்ணிக்கணும்" என்று அட்வைஸ் பண்ணுவார். ஆனால் அதே சமயம் 'இந்தியன் தாத்தா' போல் சில கொள்கைகளையும் விட்டு நகரமாட்டார். சுடோக்கு கூட சோல்வ் பண்ணிடலாம், but ! (இந்த வாக்கியம் மட்டும் முற்றுப்பெறாமல் தொக்கியே நிற்கட்டும்)

அவர் ஆரம்பித்து வைத்த பழக்கம் தான்! ஆண்டு ஒன்பது படிக்கும் போது ஒருநாள், சென் ஜோன்ஸ்க்கும் எங்களுக்கும் ஒரு U 19 மட்ச். நடந்தது சென்ஜோன்ஸ் கிறவுண்ட்ஸ். எங்களுக்கு கார்த்திக் கப்டன், அவங்களுக்கு கௌரி. அந்த நேரம் கார்த்திக கௌரி எண்டால் சச்சின், சனத் மாதிரி. யார் சச்சின்? யார் சனத்? என்ற சர்ச்சைகள் வேண்டாம். கடைசில சச்சினும் சனத்தும் சேர்ந்து மும்பைக்காக விளையாடின மாதிரி, கார்த்திக்கும் கௌரியும் யப்னா டிஸ்ரிக்குக்காக விளையாடினவங்கள். இப்ப விசயம் அதில்ல. அந்த மட்சை பார்த்தே ஆக வேண்டும் என்று அங்கஜனுக்கும் எனக்கும் ஒரே கெடு. 

சனிக்கிழமை வரதன்ட ரியூசன் இருக்கு. கட் பண்ணினா வெளுத்து போடுவான். என்ன செய்யலாம்? மண்ட முழுக்க முழு யோசினை.
அங்கஜன் சொன்னான் "12 க்கு கிளாஸ் முடிய பறப்பம்". 
"அப்ப பின்னேரம் என்ன மாதிரி? கட் அடிப்பமா?" - இது என்னுடைய அபிலாசை. 
" இரண்டு பேரும் கட் எண்டா சிங்கன் கண்டு பிடிச்சிடுவான், நாங்க ரிங்ஸ்சோட கிளம்புவம்" அது அவன்ட சொல்லுயூசன். 

பிறகென்ன , மத்தியானம் 12க்கு ஒரு லுமாலாவும் ஒரு ஏசியனும் பறக்குது. லன்சுக்கு அடுத்த செசன். எங்கட துர்ரதிஸ்டம், கிறீஸுக்க கார்த்திக்கும் இல்லை, கௌரியுமில்லை. (இப்ப எனக்கு யார் நிண்டதெண்டு ஞாபகமும் இல்லை. 'கீழ சொல்லப்போற விசயத்தால' மிடிலாம்லங்கட்டில பட்ட அடியால மறதி ஏற்பட்டிருக்கலாம்) மட்சை பாத்திட்டு கிளாஸுக்கு நேரமாச்சு எண்டு மறுபடி உளக்கிக்கொண்டு வரேக்க குறுக்கால போன நாயொண்டு சைக்கிளுக்கு குறுக்கால பாய, நான் நல்லூர் சட்டநாதரை சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட, 
அங்கஜன் சொன்னான், " மச்சான் பொய் சொன்னதுக்கு பழி, பரவாயில்லை நீ இப்ப சாமி கும்பிட்ட படியால் அடிவிழாது பார்"

சட்டநாதற்ற புண்ணியமோ என்னவோ? கடைசில பிந்திப்போயும் எங்கள் இரண்டுபேருக்கும் அடியில இருந்து பாவ விமோச்சனம் கிடைத்த நிகழ்வானது முழு வகுப்பையும் கடுப்பில் ஆழ்த்தியதே உண்மை. 

(ஸ்டார் கிரிக்கட் அடுத்த வாரம்)

No comments:

Post a Comment