உண்மைய சொன்னா, இதை எழுதேக்க கூட என்னென்னத்த சேர்க்கிறது, என்னென்னத்த விடுறது எண்டு விளங்காமல் தான் தொடங்கினது. ஆனல் கிளைமாக்ஸ்சில நம்ப கம்பவாரிதியை களமிறக்கிறது எண்டு மட்டும் முடிவாயிருந்தது. அவரை வைச்சு தானே ' அகலிகை மாட்டர' அவிழ்க்க முடியும்.
பூமியதிர்வுக்கும் , வண்ணத்துப்பூச்சியின் சிறகசைவுக்கும் தொடர்பிருக்கெண்டு 'chaos'தியரி சொல்லெக்க, நான் எழுதிற கதைக்கும் கம்பவாரிதக்கும் சம்பந்தமிருக்கிறதில என்ன தப்பு இருந்திடமுடியும்?
அதுக்கிடையில வந்த ஒரு comment கீழ்க்கண்டவாறு இருக்க,
"It is appear to betray your fiends. Is it that ?"
எனக்கும் லைட்டா ஒரு பயம், கிறுக்கபோற விசயம் எங்க சறுக்கிடுமோ? எங்கட கிறுக்கல்ல அடுத்தவன் மானத்தை காத்தில பறக்க விட்டிட கூடாது எண்டதில மட்டும் குறியா இருந்தன்.
போன முறை எங்க விட்டது.. ஆ .. ஞாபகம் வந்திட்டு ... பாராளுமன்றத்தில என்ன ?
பாராளுமன்றத்தில கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை , ஆளுங்கட்சி ஆதரவோட 2/3 பெரும்பான்மையால தோற்கடிச்சாச்சு.ஆனா ஒரு சில கண்டிசன் அப்பிளை. அதாகப்பட்டது, 'தனி நாடாக பிரிந்து செல்லமுடியாது' மாதிரி வேற எங்கயும் போக ஏலாது, யாரை வேணுமெண்டாலும் வீட்டை கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்து படிக்கலாம்.
'யாரை வேணும்' எண்டாலும் எண்டாப்போல, எங்களோட என்ன பெட்டையளே வந்திருந்து படிக்கப் போகுது. எல்லாம் நம்மட தோஸ்துக்கள் தான். பிறகென்ன தனி மாநிலம் கிடைச்ச மாதிரி முன்னுக்கு இருந்த 'office room ' எங்கட கட்டுப்பாடு. முப்படை மாதிரி நாங்களும் மூண்டு பேரா சேர்ந்தம். மூண்டு பேர் சேர்ந்து ஒரு ஒரு காரியத்தை தொடங்கினாலே அது 'விளங்காம' போகும் எண்டு ஒரு சாத்திரியும் வந்து சொல்லாமல் விட்டது நல்லதாப் போச்சு.
வஸ்து பாத்தமாதிரி வடகிழக்கு மூலையில படிக்கிற மேசையை போட்டாச்சு. ஏனெண்டா அங்க தான் பிளக் பொயிண்ட் இருக்கு. அப்ப தான் ரேடியோ போடலாம். நாங்க படிக்கிறத்துக்கு புத்தகம் முக்கியமோ இல்லையோ ரேடியோ கட்டாயம் தேவை. கேள்விப்பேப்பர் இல்லாமல் கூட கணக்கு செய்திடுவன். ஆனா ரேடியா இல்லாமல் என்ன தான் 'முக்கினாலும்' முடியாது. இளையராஜாவின் ஏதாவது ஒரு மெட்டில் 'எறியத்துக்கான' விடை நிர்ணயிக்கப்படலாம். இல்லையேல் ARR இன் இசையில் கலப்படமற்ற 'தூய' கணிதம் எனக்கு துச்சமாகலாம். காரணம் ஏன் எண்டு நரம்பியல் நிபுணர்களுக்கே புரியாத மாயாஜாலம். என் 'தலமைச்செயலகத்தின்' தனித்தன்மை.(கடைசியா A/L சோதனையில ரோடியோ கேக்கலாது எண்டு சுப்பவைசர் சொல்ல, combine maths க்கு 'A' எடுக்க குடுப்பனவு இல்லாம போனது வேற கதை)
நிஷாந்தன் ஒவ்வொருநாளும் வரேக்க அரைக்கிலோ மிக்ஸ்சர் வாங்கி கொண்டு வருவான். சோதியர் சொல்லிப் போட்டார் மிக்ஸ்சரை எடுத்து வாய்க்க போட்டுக்கொண்டால் MCQ இக்கு answer தண்ட பாட்டில வரும் எண்டு. அதால படுபாவி ஒவ்வொருநாளும் மிக்ஸ்சர் கொண்டு வருவான். அதுக்கிடையில அருண் சொல்லுவான்
"மச்சான் வாங்கிறது தான் வங்கிறாய் 'alpha மிக்ஸ்சரை' வாங்கிட்டு வா, அதான் நல்ல இருக்கும்".
இப்பிடியா எங்கட படிப்பு போய்க்கொண்டிருக்கும். இடையில டின்னெர் பிரேக் , ரீ-பிரேக் எல்லாம் வரும். சாமம் பதினொன்டரை பன்ரெண்டானால் தூரத்தில ஒரு Honda-C90 இரைஞ்சு கேக்கும். கொஞ்ச நேரத்தில கிட்ட கிட்டவா வந்து கடைசில எங்கட படலையில நிண்டிடும். நம்ம ஐங்கரதாஸ் ஒரு சின்ன ஷொர்ட்சும் ஸ்ரீ லங்கா கிரிகெட் ரீ சேட்டோடையும் நிப்பான். அவருக்கு அது தான் ஏரியா செய்யிற நேரம்.
இப்பிடி maths செய்ய பாட்டு , physics செய்ய மிக்ஸ்சர் எண்டு 'ஊக்கிகள்' இருக்க, chemistry இக்கு என்ன ஊக்கி?
chemistry எண்டதான் மகாதேவா தான் ஞாபகத்துக்கு வாறார்
*******************************************
என்னடா ஒரே ஜவ்வாஇழுபடுது எண்டு நினைக்கிறது சரிதான். பத்து நிமிசத்தில எழுதி முடிக்க இது என்ன பனங்காய் பணியாரம் சுடற மாட்டரே? பல தசாப்தங்களின் தொகுப்பு. கொஞ்சம் முன்ன பின்ன போய் தான் வரும். ஹேராம் படத்தை 'உச்சா' போக கூட எழும்பாம ஒட்டுமொத்த படத்தையும் ஒரே மூச்சில பாத்து முடிக்கிற ஆக்கள். நாங்க எழுதினாலும் அப்பிடி தானே இருக்கும்.
கதை எழுதின உடன 'க்ளைமாஸ்' வரோணும் எண்டு எதிர் பாக்கலாமோ? இண்டைக்கு நான் எழுதிறன். நாளைக்கு ஒருத்தன் வாசிப்பான். அவன் தன்ட view ஐ comment ஆ போடுவான். அந்த view இல இருந்து யோசிக்க புது idea வரும். இடையில வேற இரண்டு பேர் வேற idea தருவினம். அதில இருந்து பாக்கேக்க வேற ஆங்கிள்ள கதை தெரியும். இப்பிடியே கதை டெவலப் ஆகும். ஆனா 'கதை' நான் எழுதினது. இதெல்லாம் என்ன எனக்கு பெருமையா? இல்லை டைம் பாஸ்.. (வேலைமினக்கெட்ட அம்பட்டன் பூனையை பிடிச்சி சிரைச்சானாம்.)
என்ன இவன் எப்பவும் கமல் டயலாக்கை களவாடுறானே எண்டு ஆராயப்படாது. அதான் முன்னுக்கே சொல்லிட்டனே! குடிக்கிறது தான் வெளியில வரும் எண்டு. விளங்கேல்லயா? மறுபடி ஒருக்கால் முதல் பகுதியின் இரண்டாம் பத்தியை படிக்கவும் - நன்றி!
**************************************************
மகாதேவா சேர் - என்னைப்பொருத்தவரையில , எனக்கு இரசாயனவியலின் தந்தை. ஒருக்கால் பஸ்ஸில போகேக்க ஏதோச்சைய சந்திக்கிற வாய்ப்பு. நான் எழும்பி சேருக்கு இடங்குடுக்க,
" வேண்டாம் நீர் உட்காரும்" எண்ட
எனக்கு மனங்கேக்காம
"இல்லை சேர் நீங்க இருங்கோ" எண்ட,
இப்படியே பரஸ்பர விட்டுக்குடுப்ப பாத்திட்டு பக்கத்து சீட்டில இருந்த அக்கா
" நீங்க இரண்டு பேருமே இருங்கோ, நான் இந்த அடுத்த halt ல இறங்க போறன்"
எண்டிட்டு எழும்பீட்டா.
சேருக்கு பக்கத்தில இருக்க பயம் எனக்கு, எதாவது chemistry ல கேட்டிடப் போறாரோ எண்டு தான். சத்தம் போடாமல் இருந்தன்.
சேர் தான் முதல்ல கதையை தொடக்கினார்.
" உம்மட ஊர் ?"
"கோப்பாய் சேர்"
"கோப்பாயில ?"
" சந்தி பஸ் halt க்கு பக்கத்தில"
"அப்பிடியேண்டா கிரிதரன் உமக்கு ?"
" சித்தப்பா "....
இப்படியே நெல்லியடியில சேர் இறங்கு வரைக்கும் கதை போச்சுது. இறங்கேக்க சொன்னார்
"சரி 'கோப்பாய்' நான் இறங்குமிடம் வந்திட்டு. சனிக்கிழமை வகுப்பில சந்திப்பம்"
மகாதவா சேரிட்ட படிச்சாக்களுக்கு தெரியும். மனிசன் தனக்கு பிடிச்ச ஆக்களுக்கு தானே ஒரு பேர் வைச்சு கூப்பிடுவார். அப்பிடி எனக்கு வைச்ச பெயர் தான் 'கோப்பாய்'. கூடுதலா அவர் கூப்பிடுறார் எண்டால் அர்த்தம் பெடியள் 'மண்டக்காயா' இருப்பாங்கள். நான் தான் இதில விதிவிலக்காய் இருந்திருப்பன். Chemistry க்கும் எனக்கும் அப்படி ஒரு பொருத்தம்.
பேர் வைச்சார் எண்டா வகுப்பில அப்ப்ப கூப்பிடுவார். கேள்விகள் கேப்பர்.
அந்த நேரம் 'inorganic chemistry'. போய்க்கொண்டிருந்தது. முதலாம் கூட்ட மூலகம், இரண்டாம் கூட்ட மூலகம் எண்டு விளங்கப்படுத்திக் கொண்டு போனார். அப்பிடியே board ல ஒரு தாக்கத்தை எழுதினார்.
NaOH + HCl --> NaCl + H2O
எப்பிடி பிணைப்பு விடுபடுகுது, எப்பிடி ஈற்றோட்டு இலத்திரன்கள் பங்கிடபடுகுது எண்டு எல்லாம் விளங்கப்படுத்திப்போட்டு அடுத்த தாக்கத்தை எழுதினார்.
Ca(OH)2 + HCl --> ?
திரும்பி பெட்டையளிண்ட பக்கமா பாத்தார். அந்தாள் Left இல signal ல போட்டுட்டு right இல திருப்பிற ஆள். நான் அறிய சேர் ஒரு நாளும் பொம்பிளபிள்ளயளிட்ட கேக்கிறேல்ல. ( எல்லாம் அந்த 'பென்சீன்' பிரச்சனையின் விளைவோ தெரியேல்ல). தெரியும் செல் இஞ்சால தான் விழப்போகுது எண்டு. அந்தக்கிழம ராசிபலனில எனக்கு "குருவின் பார்வை கிட்டும்" எண்டு கிடந்தது மறந்து போச்சு. இல்லாட்டி நான் பங்கருக்க பதுங்கியிருப்பன்.
" கோப்பாய் நீர் சொல்லுவது".
சேர் கூடுதலா பன்மை முன்னிலையில தான் ஆக்களை கூப்பிடுவார்.
தலையில செல் விழுந்த கணக்கா இருந்திச்சு.
வகுப்பு முழுக்க என்னை வேடிக்கை பாக்குது, நான் என்னவோ அருள்வாக்கு குடுக்க போறமாதிரி.
விடை தெரியாத ரென்சன் ஒருபக்கம், நோண்டியாக போறன் எண்ட யோசனை மறுபக்கம் என புறவிசைகளின் தாக்கத்துக்கு ஈடு குடுத்துக்கொண்டு board ஐப் பாத்தன்.
பக்கெண்டு ஒரு மனக்கணக்கு..
/ முதல் தாக்கத்தில Na, இங்க Ca. N உம் C உம் தானே வித்தியாசம். இதுக்கு போய் ஏன் மண்டைய உடைப்பான்? /
"சேர்.... CaCl + H2O"
திருப்பியும் கேட்டார்.
"வடிவா யோசிச்சு சொல்லும்"
உந்தாள் சரியா சொன்னாலும் உப்பிடி வெருட்டி பாக்கிறவர். அதால நான் பெரிசா எடுக்கேல்ல. ஆனாலும் முன்வாங்கில இருந்த 'மண்டைக்காய்கள்" எல்லாம் என்னைத்திரும்பி பாத்தவங்கள். சில பெட்டையள் கூட பாத்தவை. அதைக்கூட நான் பொருட்படுத்தாமல் திருப்பியும் சொன்னனதையே சொன்னன்.
அங்கே என்னால் ஒரு இரசாயன புரட்சி நடந்ததை நானே அறிய வாய்ப்பு இருக்கேல்ல.
இளகின இரும்பை கண்டால் கொல்லன் எதையோ தூக்கி தூக்கி அடிப்பானாம். அந்தமாதிரி இந்த நிலை. சேரும் என்ன விடுறதா இல்ல.
" சரி தாக்கத்தை சமப்படுத்தும்".
அப்பத்தான் OH க்கு கீழ 2 இருந்தது கண்ணுக்கு தெரிஞ்சுது.
நல்லகாலம் கணக்கெண்ட படியால மண்டை கொஞ்சம் வேலைசெஞ்சு ஒருபடியாச் சொன்னன்
Ca(OH)2 + 2 HCl --> CaCl2 + 2 H2O.
பாவம் சேர். நான் சொன்ன விடைகளை கேட்டுத்தான் 'பூலோகத்தை விட்டே போகோணும் எண்டு முடிவெடுத்தாரோ ?'எண்டு அஞ்சலிக் கூட்டத்தில நிக்கேக்க ஒருகணம் எனக்குள்ள நான் நினைச்சுப்பாத்தன்.
--------------------------------
இப்பிடி வாழ்க்கை போய்க்கொண்டிருக்க ஒருநாள், முருகன் கோயில்ல திருவிழா. தேரில்லண்டு இரவு கம்பவாரிதி ஜெயராஜ் வந்திருந்தார். வாரிதியார் வாறதேண்டதால அண்டைக்கு எங்கட combine study க்கு 'day off' . அந்தாள் ராமாயணத்தை சொல்லத் தொடங்கினால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம். சச்சிண்ட கவர் டிரைவ் போல சும்மா ஷார்ப்பா போய்க்கொண்டிருக்கும். இதை எல்லாம் நான் சொல்லி நீங்க அறியவேண்டியதில்லை. முந்தி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில ராமாயண பிரசங்கம் நடக்கேக்க அப்பா கூட்டிக்கொண்டு போறவர். அந்த நேரம் இருந்த ஒரே ஒரு சுவாரசியமான பொழுது போக்கு இதுகள் தானே. படம் கிடம் ஒண்டும் பாக்க ஏலாது. அப்பதொட்டு அடியேன் 'வாரிதிதாசன் '.
தலைவர் பிரசங்கத்தை தொடங்கீட்டார். இந்த கதை மாதிரி, எங்கயோ தொடக்கி ஒவ்வொண்டாச் சொல்லிக்கொண்டு அப்பிடியே ராமன் காடேகிற சீனுக்கு வந்திட்டார். அகலிகை என்ரி ஆகிற சீன். அதுக்கும் எடுத்து விட்டார் ஒரு பாட்டை.
"கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்"
"என் தலைவன், தசரதராமன் காட்டுக்குள்ளே போகிறான். கூடவே ஜானகியும் தம்பி இலக்குமண்ணும் போகின்றனர். காடு, மேடு, எல்லாம் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்திலே ராமன் இளைப்பாற எண்ணி ஒரு மரத்தடியே ஒதுங்குகிறான். அம்மரத்தடியே கல்லாய்க் கிடந்தவள் அய்யன் காலடி பட்டு கன்னியாக அவதரிக்கின்றாள்."
வாரிதியார் கணீரெண்ட குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். எனக்கு அதில எல்லாம் இஷ்டம் இருக்கேல்ல. எப்படா கல்லாய் மாறின காரணத்தை சொல்லுவார் எண்டு இப்ப நீங்கள் ஆவலாய் வாசிக்கிற மாதிரி , அப்ப நானும் ஆவலாய் வாரிதியாரிண்ட வாயை பாத்து கொண்டிருந்தன்.
நான் ஆவலோட எதிர்பாத்துக்கொண்டிருந்த மில்லியன் டொலர் கேள்வியை கேட்டார் தலைவர்.
" அகலிகை ஏன் கல்லானவள் ?"
நல்ல மனிசன். தானே கேள்விய கேட்டிட்டு தானே பதில் சொல்லுவார். இந்த இலக்கிய வாதிகளே இப்பிடித்தான். பதில உடன விளங்கிறமாதிரி சொல்லாயினம். கொஞ்சம் பில்ட் அப் குடுப்பினம். பதில் பாட்டா வந்திச்சு
"மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்."
அதுக்கும் ஒரு பாட்டை எடுத்து விட்டார்.
சரி இனிவரப்போகுதையா சமாச்சாரம் எண்டு சீட்டிங் பொசிசணை எல்லாம் சேஞ்ச் பண்ணிக்கொண்டு கேட்டால் , வாரிதியார் சொன்னார்
" கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எண்டு கேள்விப் பட்டிருப்பீங்கள், இங்க மனிசியின்ட தொல்லை தாங்காமல் மனசைக் கல்லாக்கிக்கொண்டு மனிசியையையும் கல்லாக்கீட்டர் மகரிஷி. எண்டாலும் பாவத்துக்கு இரங்கி கௌதம முனிவர் ஒரு வரங்குடுத்தார். அது என்னவெண்டா, எப்ப ஒரு 'கற்பு நெறி தவறாத' ஒருவன் உன்னை மிதிக்கிறானோ அப்ப நீ மறுபடி பெண்ணாகலாம்."
அதால ராமன் ஒரு 'கற்பு நெறி தவறாதவன்' எண்டதை உலகத்துக்கு எடுத்துக்காட்டவே அவள் கல்லாய் மாறினவள்"
எண்டு கம்பரே சொல்லாத கங்குலூசனை (conclusion) சொல்லி படு சப்பையாய் முடிச்சிட்டார். இந்த மொக்கைய கேக்க தான் இந்த பில்டப்பா எண்டு இப்ப நீங்க கடுப்பாகிற மாதிரித்தான் அப்ப நானும் கடுப்பாகி கதாப்பிரசங்கத்தை பாதில விட்டிட்டு வீட்ட வந்திட்டன்.
திரும்பிவரேக்க எனக்குள்ள ஒருடவுட். வேறேன்னத்தில, எல்லாம் வாரிதியாரிண்ட பதில்லதான். 'என்ன இது தசாவதாரம் மாதிரி குழப்புதே? எப்பயோ பிறக்க போற ராமன் நல்லவன் எண்டதை நிரூபிக்க பாவம் ஒரு பெண்ணை கல்லாக கடவாய் என்று சபிப்பதா?'. இப்பவரைக்கும் அந்த டவுட் அப்பிடியே இருக்கு
(பெரும்பான்மையை கேட்டால் 'இதுவும் இறைவனின் திருவிளையாடலில் ஒன்று' எண்டு சொல்லி கடுப்பேத்துவினம் எண்டிட்டு எனக்குள்ளயே கேக்காம வைச்சிருக்கிறன்.)
ஆனாலும் மனசுக்க ஒரு வைராக்கியம். எப்பவாவது வாரிதியாரை கண்டால் இதை ஒருக்கா கண்டிப்பா கேட்டிட வேணும் எண்டு.
பிறகொருநாள் வாரிதியாரை பள்ளிக்கூடத்தில நேருக்கு நேர் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. மனுசன் ஒருக்கா 'chief guest ' ஆ வந்தவர். அவரிண்ட 'lunch arrangement' எல்லாம் அடியேனுடைய பொறுப்பில. அதால அவரோட கொஞ்சம் ஆறுதலா கதைக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த நேரம் கேட்டன்,
"ஏன் நீங்க அகலிகை கல்லாய் மாறினதுக்கு அப்பிடி ஒரு காரணம் சொன்னீங்கள்?"
மனுஷன் சிரிச்சு கொண்டே சொன்னார்,
"'உண்மையான காரணத்தை அறிய நீர் இன்னும் வளரனும், அதுக்கு முதல்ல நல்லா சாப்பிடனும். வாரும் சாப்பிடுவம்"
மறுபடியும் மூக்குடைஞ்சது தான் மிச்சம்.
(யாவும் கலப்படமற்ற காலாவதியாகா கற்பனை)
உசாத்துணை : http://www.chennailibrary.com/ (கம்பராமாயண கவிதைகள்)